×

10 பல்கலை. வேந்தராக விரைவில் தமிழக முதல்வர்; ஆளுநரின் நடவடிக்கையால் சந்தி சிரிக்கிறது: ஓய்வு நீதிபதி சந்துரு பேச்சு


சேலம்: சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திடலில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகத்திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. இவ்விழாவில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இதில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு சட்டமும், சமூகமும் என்ற தலைப்பில் நேற்று பேசியதாவது: சால்வை, பூச்செண்டு, பழக்கூடை ஆகியவற்றிக்கு பதிலாக அனைவரும் புத்தகம் கொடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுவரை அவருக்கு 1 லட்சம் புத்தகத்திற்கு மேல் வந்து அவற்றை நூலகங்களுக்கு கொடுத்துள்ளார். இந்தியாவில் எந்த முதல்வரும் இதுபோல் செய்யவில்லை.

சட்டம் ஒரு இருட்டறை, அதில் வழக்கறிஞர் வாதம் ஒளிவிளக்கு என்றார் அறிஞர் அண்ணா. ஆனால் தமிழகத்தில் இருக்கும் ஆளுனருக்கு சட்டம் தெரியாதா? கேட்டு தெரிந்து கொள்ள ஆட்கள் இல்லையா? அவரது நடவடிக்கையை கேட்டு சந்தி சிரிக்கிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இசைவு தருவதில் அவருக்கு என்ன கஷ்டம். தமிழக அரசு வழக்கு தொடர்ந்த பிறகு, 10 மசோதாவை திருப்பி அனுப்பிவிட்டேன் என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். சட்டங்களை இயற்றும் சட்டமன்றம், நாடாளுமன்றம் இறையாண்மை பெற்ற அமைப்பு. மசோதாவை ஒருமுறை திருப்பி அனுப்பினால், மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினால் கையெழுத்து போடவேண்டும். ஆளுனருக்கு வக்கீல் இல்லையா? தகுதி, ஞானம் இல்லையா? சட்டம் தெளிவாக இருக்கிறது.

2 ஆண்டுகளாக தென்மாநிலத்தில் உள்ள ஆளுனர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இருக்கிறார்கள். 5 மாநிலங்களில் சட்டத்திற்கு இசைவு தரமாட்டோம் என்கிறார்கள். இவர்களுக்கு பின்னால் ஒரு சக்தி இருக்கிறது. ஆளுனர் பதவி தகுதி இல்லாத பதவியாக இருக்கிறது. 2 ஆண்டுகள் தூங்கிவிட்டு, இப்போது ஞானம் வந்தது எப்படி என நீதிபதிகள் கேட்கிறார்கள். ஆளுனர் ஒரு தபால்காரர்தான். இது ஒரு கவுரவ பதவி. ஆளுனர்களை ஒரு கருவியாக பயன்படுத்தி ஆட்சிக்கு குந்தகம் விளைவிக்கின்றனர். பல்கலைக்கழக வேந்தர் என்றால் ராஜா கிடையாது. விரைவில் 10 பல்கலைக்கழகங்களுக்கு தமிழக முதல்வர் வேந்தராக வருவார். இவ்வாறு அவர் பேசினார்.

The post 10 பல்கலை. வேந்தராக விரைவில் தமிழக முதல்வர்; ஆளுநரின் நடவடிக்கையால் சந்தி சிரிக்கிறது: ஓய்வு நீதிபதி சந்துரு பேச்சு appeared first on Dinakaran.

Tags : 10 University ,Tamil Nadu ,Governor ,Chanduru ,Salem ,Tidal ,Justice ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...